கட்டுரை

காத்திருக்கும் வேகத் தடைகள்

முத்துமாறன்

நாற்பதுக்கும் நாற்பது என்ற என்ற முழுமையான இலக்கை இந்த தேர்தலில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி எட்டிப் பிடித்துள்ளது.  காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் உட்பட்ட கூட்டணியில் கமலஹாசனின் மய்யமும் சேர்ந்ததில் திமுக அணி வலிமையாகவே தோற்றம் அளிக்கிறது.

1996, 2004 தேர்தல்களுக்குப் பின்னால் இப்போது 40/40 என்ற பிரம்மாண்ட இலக்கை எட்டி இருக்கும் திமுக அணியினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மகளிர்க்கு 1000 ரூ உரிமைத் தொகை, கட்டணமில்லாப் பேருந்து,  பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி, போன்ற மக்கள் நலத் திட்டங்கள் திமுக அணிக்கு ஆதரவாக இருந்தன. மத்திய அரசு நிதிப் பகிர்வில் காட்டும் ஓரவஞ்சனை பற்றிய பிரச்சாரங்களும் கைகொடுத்தன. அதிமுக பிளவுண்டு நிற்பதும் வலுவான கூட்டணி அதற்கு அமையாததும் வெற்றியை திமுக கூட்டணிக்கு வாரி வழங்கி உள்ளது.

இதைத்தொடர்ந்துதான் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 200க்கு  மேற்பட்ட இடங்களில் வெல்லவேண்டும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் பெற்ற வாக்குகளைப் பார்க்கையில் 221 இடங்களில் திமுக கூட்டணிக் கட்சிகள் அதிகம் பெற்று முதலிடத்தில் இருப்பதால் இதையே சட்டமன்றத்துக்கும் தக்க வைக்கவேண்டும் என்று திமுக கூட்டணி எண்ணுவது இயல்புதான். ஆனால் எப்போதுமே சட்டமன்றத் தேர்தல் என்றால் ஒரு விதமாகவும் நாடாளுமன்றத்தேர்தல் என்றால் இன்னொரு விதமாகவும் வாக்களிப்பது தமிழ்நாட்டு வாக்காளர்கள் இயல்பு. இந்தத் தேர்தலில் சுமார் 20 சதவீத வாக்குகளை அதிமுக பெற்றிருக்கலாம். ஆனால் சட்டமன்றம் என வந்துவிட்டால் சரியான போட்டியாக அதிமுகவே இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விசயமே.

2019 மக்களவைத் தேர்தலில் 38 இடங்களில் திமுக கூட்டணி வென்றபோதும் 2021 சட்டமன்றத் தேர்தலில் இது எதிரொலிக்கவில்லை.  75 இடங்களில் அதிமுக கூட்டணி வென்று வலுவான எதிர்க்கட்சி அமைந்தது. இத்தனைக்கும் அப்போது அதிமுகவுக்கு எதிராகப் பேசுவதற்கு ஏராளமான விசயங்கள் திமுகவுக்கு இருந்தன. பத்து ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்ததால் ஆட்சிக்கு எதிரான மனநிலை இருந்தது. அதிலேயே இந்த நிலை எனில்,  ஐந்தாண்டுகள் ஆட்சியை நடத்தி, அதன் பின்னர் மக்களைச் சந்திக்கும்போது பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர் ஓய்வூதியம் உட்பட்ட பிரச்னைகள் நிச்சயமாக திமுக அரசு உடனடியாகத் தீர்க்க வேண்டிய நிலையில் உள்ளன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதே இந்த இரு தரப்பினரும் திமுக கூட்டணிக்கு எதிராக வாக்களிக்கவே முனைப்புக் காட்டினர். தபால் ஓட்டுகளில் இது எதிரொலித்தது.

திமுக கூட்டணி 2019 மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதம் 53.2% 2021-இல் பெற்ற வாக்கு சதவீதம் 45.4%.  இந்தத் தேர்தலில் அது மேலும் குறைந்து 47%ஆக உள்ளது. கூட்டணியில் மாறுதல் இல்லாதபோது ஆறு சதவீத வாக்குகளை அது இழந்துள்ளது. மநீம கட்சிகூட இந்தத் தேர்தலில் கூடுதலாக இணைந்தது என்பதைக் கவனிக்கவேண்டும்.(குறைந்தது அதன் காரணமாக என்பது குதர்க்கவாதம்)

இந்த இழப்பு ஏன் என்பதும் திமுக கவலைப்பட வேண்டிய ஒரு அம்சமாகும்.

சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க அரசுக்கு எதிரான பிரச்சாரங்கள் அதிகமாகும். அச்சமயம் அதிர்ஷ்டவசமாக(!) கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய சாவுகள் போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்கவேண்டும். சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருக்கவேண்டும். மக்களை ஏற்கெனவே சொத்துவரி உயர்வு போன்ற கட்டண உயர்வுகள் பாதித்த நிலையில் முன்பு சொல்லப்பட்ட மின் கட்டணத்தை மாதந்திரமாக எடுப்பது போன்றவை செய்யப்பட வேண்டி இருக்கிறது.

இன்றும் திமுகவுக்கு கவலை தரக்கூடியதாக கொங்கு மண்டல நிலைமை உள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் ஒரு இடம் கூட வெல்ல முடியவில்லை என்பதும் மேற்கு மாவட்டங்களில் உள்ள  61 இடங்களில் 16 இடங்களைத் தான் கடந்த தேர்தலில் அவர்களால் வெல்ல முடிந்தது என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.  இதை சவாலாகக் கொண்டதால்தான் கோவையில் முப்பெரும் விழா நடத்தி 200 இடங்களுக்கு மேல் வெல்லவேண்டும் என ஸ்டாலின்  முழங்கியதாகக் கொள்ளலாம்.

திமுக கூட்டணி இப்படியே நீடிக்கும் என வைத்துக்கொண்டாலும் நிச்சயமாக எதிரணியில் மாற்றங்கள் இருக்கலாம். அதிமுக பாஜக பாமக தேமுதிக என்ற கூட்டணி கடந்த சட்டமன்றத் தேர்தலில் தோற்றதாக இருந்தாலும் மீண்டும் உருவாகக் கூடும். இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குகளின் படிப் பார்த்தால் அது மிகவும் சவாலான கூட்டணியாக இருக்கும். இதே அடிப்படையில் வாக்குகள் விழாது என்று வைத்துக்கொண்டாலும்.

‘எப்படியும் 2026 சட்டமன்றத் தேர்தல் சவாலாகவே இருக்கும். இந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள், திமுகவுக்கு தங்கள் தவறுகளைத் திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு என்றே நான் கருதுகிறேன். தேர்தல் வாக்குறுதிகள், மக்கள் பிரச்னைகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பிரச்னைகள் ஆகியவற்றில் மேலும் கவனத்துடன் திமுக இருக்கவேண்டும்’ என்கிறார் மூத்த பத்திரிகையாளர் பிரியன்.

ஆட்சி நிர்வாகத்தில் மேலும் கவனம் கூட்டுவதுடன் நம் பொதுச் செயல்பாடுகளை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்ற எண்ணமும்தான் திமுகவுக்கு இப்போதைய தேவை.